நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Monday, 25 July 2016

கிமு. கிபி. புத்தக விமர்சனம் (Kimu Kipi Book Review)


நாம் வாழும் உலகத்தின் வியப்பூட்டும் திகைப்பூட்டும் அதிர்ச்சியூட்டும் ஆச்சரியமூட்டும் ஃப்ளாஷ்பேக்…!
kimukipi
வரலாறு என்றவுடனே நினைவில் வருவது சிறுவயதில் படித்த சமூக அறிவியல் புத்தகம்தான். அந்த புத்தகத்தை மிக சிரமப்பட்டு படித்தேன் மேலும் ஆசிரியர் கேட்க்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அடியும் வாங்கி இருக்கிறேன். அப்பொழுதிலிருந்தே வரலாறு என்றாலே பிடிக்காது.
ஒரு நாள் நண்பர் ஒருவர் வைத்திருந்த புத்தகம் ஒன்றை எதேச்சையாக வாங்கி சில பக்கங்களை புரட்டினேன். அது வரலாறு சம்பந்தபட்ட புத்தகம்.   உடனே புத்தகத்தை மூடி விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அப்புத்தகத்தில் எதோ ஒன்று வித்தியாசமாக எனக்கு தோன்றியது. சரி, மேலும் படிக்கலாம் என்று தொடர்ந்தேன். அந்த சில பக்கங்களே மனதில் ஒரு ஆச்சிரியத்தையும் விறுவிறுப்பையும் விதைத்து விட்டன. சரி முழுவதும் படிக்கலாமே என்று நினைத்து கடையில் வாங்கிய புத்தகம் தான் கிமு. கிபி.
புத்தகத்தை படிக்க தொடங்கிய உடனே என் மனதில் தோன்றிய எண்ணம் “நாம் படிப்பது வரலாறுதானா?” ஏன் என்றால் அவ்வளவு ஜாலியாக இருந்தது புத்தகம். கிட்டதட்ட மதன் (புத்தகத்தின் ஆசிரியர்) அவர்கள் சொல்வது போல ஒரு அகழ்வாராய்ச்சி சுற்றுலா போனது போன்ற ஒரு உணர்வை அடைந்தேன். இந்த புத்தகத்தை போன்று என் வரலாறு புத்தகம் இருந்திருந்தால், நான் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து இருக்க மாட்டேனோ என்னவோ.
புத்தகத்தின் தொடக்கம் மனிதன் என்ற தலைப்பில் ஆரம்பிக்கிறது. அதில் பாக்டீரியாக்களை பற்றிய தகவல் வரும்போது ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார் “நியாயமாக இந்த பாக்டீரியாதான் நம் முதன்மையான எள்ளுத் தாத்தா!” இதை படிக்கும்போதே ஒரு ஜாலியான உணர்வு வருகிறது.  இது போன்ற வரிகள் புத்கம் முழுவதும் குவிந்துள்ளன.
டைனோசரில் தொடங்கி, உலகின் முதல் மனிதன் பெண், ஹமுராபியின் பாபிலோனிய பேரரசு, மொஹென்ஜோதாரோ நாகரிகம், எகிப்து நாகரிகம், கிரேக்க – பாரசிகப் போர், கிரேக்க தத்துவ மேதைகள், மெளரிய சாம்ராஜ்ஜியம், கலிங்கப் போர் மற்றும் கிறிஸ்து பிறப்பு வரை ஒவ்வொரு பகுதியும் நம்மை அந்த காலகட்டத்திற்கே கொண்டு செல்கின்றன.   ஒவ்வொரு பகுதியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லமால் சிறப்பாக இருந்தது. மொத்தத்தில் நாம் அனைவரும் படித்து பின் நம் வீட்டில் நிச்சயம் வைத்துகொள்ள வேண்டிய சிறப்பான புத்தகம் .
நான் புத்தகத்தை பனுவலில் இருந்து வாங்கினேன்.  விலை ரூபாய் 150.

0 comments:

Post a Comment