நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Tuesday 26 July 2016

வித்து இல்லாதவன் சொத்தை



விதை பாதுகாப்பு என்பது தமிழர்களின் கை வந்த கலை “விதை இல்லா வீடு வதை படும் வீடு” என்பது தமிழ்நாடுப் பழமொழி “வீணாய்ப் போனவன் தான் விதை நெல்லை விற்றுத் தின்பான்”என்பது இன்னுமொரு தமிழ்ப் பழமொழி. அவரவர் வீட்டில், அவரவர்க்கான விதை பாதுகாக்கப்பட்டு வந்தது நம் மரபு. என்றைக்கு விதைகளை அரசாங்கக் கிடங்குகளில் விற்பனைச் சரக்காக அரசாங்கம் கொண்டு வந்ததோ , அன்றே விவசாயிகளை, தற்சார்பிலிருந்து பிறழ வைத்து, சோம்பேறியாக வாழ வைத்து,விளை பொருளின் தரத்தை குறைத்திட, அரசாங்கம் துணை போய்விட்டது என்று பொருள். தரமான விதை இருந்தால் தான் தரமான விளை பொருள் கிடைக்கும். விவசாயிகள் வைத்திருந்த விதை நெல் பாதுகாப்பை, அரசாங்கம் எடுத்துக் கொண்டால், அரசாங்க இல்லகாக்கள் போல எல்லாமே ஏனோ தானோ தான்; தரக்குறைவான விதைதான்; தரக்குறைவான விளைபொருள்தான், எல்லாமே ஒரு நச்சுச்சுழல்.
விதை எடுப்பதிலும், விதை பாதுகாப்பதிலும், விதை நேர்த்தி செய்வதும் உழவர்களின் மரபு வழிவந்த தனித்தன்மையாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக குடும்ப் பாரம்பரியமாக, மடை மாற்றம் செய்து பாதுகாக்கப்பட்ட தொழில் நுட்பம், அண்மைக்காலம் வரை நீக்கமற நிறைத்திருந்த பண்ப்பாடு. இன்று மறைந்தே போய்விட்டது.
விதை நெல் எடுக்கும் முறையைப் பாருங்கள்.
விளை நிலத்திலேயே, எந்த மூலையில்(பகுதியில்) விளைச்சல் தரமானதாக, கலப்புக்கதிர் இல்லாமல், ஒரே சீராக விளைந்து, முற்றி, சமஅளவு கதிர்களாகப் புலப்படுகிறதோ, அந்தப் பகுதியை விதை நெல் எடுக்க ஒதுக்கி வைப்பார்கள். அந்தப் பகுதியை தனியே அறுத்து, களத்து மேட்டில் தனியாகக் கட்டி அடுக்கி, தனியாக அடிப்பார்கள். அதிலும் அரி எடுத்து ஒரே அடியில் விழக்கூடிய நெல் மணிகள் மட்டும் விதைக்காக சேகரித்துக் கொள்ளப்படும்.அடுத்த அடியில் நெல் உதிரச்செய்ய அடுத்தவர்களிடம் கொடுத்து சற்று தள்ளி அடிக்க விடுவார்கள். கதிரின் நுனி பதரும் அல்லது முற்றாத நெல்லும் விதைக்குக் கூடாது. அடிப்பகுதி முற்றிய நெல்மணியை விட நடுக்கதிரில் உள்ள நெல்மணியே பெரிதானதாக, விதைக்கத் தேரிந்தெடுக்கப்படும் என்பது நம் விவசாயிகள் கடைபிடித்து வந்த உயர்ந்த வழி.
அப்படி எடுத்த விதை நெல்லை உலர வைத்து, கோட்டையாகக் கட்டி பாதுகாத்தார்கள். கோட்டை என்பது நெல்லின் தாளினாலேயே முட்டை போன்று உருண்டை வடிவத்தில் கட்டி வைத்துக்கொள்வது; வைக்கோல் தாளினாலேயே கட்டப்பட்ட விதை நெல் முட்டை தான் கோட்டை. விதைகள் மூச்சிவிட காற்றுபோக்கும் உண்டு. கோட்டையின் மீது சாணிப்பால் தடவி விடுவதால் அந்துப்பபூச்சி போன்று எதுவும் உள்ளே நுழைய முடியாது. அப்படிப்பட்ட செலவில்லாத, அறிவியல் பூர்வமான, கலை நுட்பம் பொருந்திய விதை பாதுகாப்பு முறை நம் பாரம்பரியமானது.
தேவைப்படும் பொழுது கோட்டையாகவே நீரில் அமிழ்த்தி, ஊற வைத்து மறுநாள் எடுத்து முளைக்கட்டிய நிலையில் விதைத்து விடுவார்கள். ஊறவைத்த விதைகளைப் பார்க்கும்போதே விதையின் தரம் தெரிந்து விடும். எல்லா விதைகளும் பழுதில்லாமல் முளை விட்டிருக்கும்.
இப்போது கோட்டை கட்டத் தெரிந்தவரும் யாரும் இல்லை, கோட்டை என்றால் என்னவென்று தெரிந்த விவசாயிகள் இருக்கிறார்களா என்பதும் ஐயமே! விதை பாதுகாப்புக்கு அத்தனை முக்கியத்துவம்.
நாடே பஞ்சம் வந்து தத்தளித்தாலும்,வெள்ளத்தில் முழ்கி விடையெல்லாம் அழிந்துபட்டாலும், விதை எடுத்து வாழ்வியலை மீட்டேடுக்கத்தானே,கோவில் கலசத்தில் வரகு விதை வைத்து பாதுகாக்கும் நுட்பம் இருந்திருக்கிறது!
பிறந்த வீட்டிலிருந்து புதுமணப்பெண் மணமகன் வீட்டில் முதன் முதல் நுழையும்போது, மரக்காலில் அல்லது படியில் விதை நெல் எடுத்து, தோழிகள் புடை சூழ நுழைவது இன்றும் சம்பிரதாயமாக, சடங்காக, நாட்டுப்புறத் திருமணங்களில் காண முடிகிறது தானே! புதுமணப்பெண் புதிய இடத்தில் விதைக்கப்படுகிறாள். விதை எடுத்துச் சென்று பிறந்த வீட்டுப் பாரம்பரியத்தை, புகுந்த வீட்டில் நிலை நாட்டுகிறாள்; இரண்டு வித நெல் ரகங்கள் இப்போது இருப்புக்கு வந்து விடுகிறது.
திருமண நிகழ்ச்சியில், படி நிறைய விதை நெல் வைத்து நல்ல விளக்கு ஏற்றித்தானே சுற்றி வந்து வழிபாடு நடத்தி, மணம் முடிக்கப் படுகிறது; வீட்டில் பெரியவர்கள் உயிர் விடும் தலை மாட்டருகே சாணத்தில் விதை நெல் பதித்து சுவரில் தட்டி வைத்து, அந்நெல்லைப் பயன்படுத்தி முளை கட்டி ம் சடங்கின் போது, முளை கட்டிய வித்துக்களை நீர் நிலையில் விட்டார்கள். அது எங்கோ சென்று வேர் பிடித்து, செடியாக, பயிராக, மாட்டிற்கு, நாட்டிற்கு, மனிதனுக்கு ஒட்டுமொத்த உயிர்ம வாழ்க்கைக்கு பயன்படும் மரபு வழி பண்பாட்டைக் காத்த பரம்பரை தானே நம்முடையது!
இறப்புநிகழ்ச்சியின் போது, இறந்துப்பட்ட உடலைச்சுற்றி விதை நெல்லை படியில் ஏந்தி சுற்றி வந்து வீட்டிற்குள் எடுத்துச் சென்று, விதை நெல் பாதுகாப்புப் பணியில் வைப்பது, இன்றும் எல்லோர் வீட்டிலும் நாடு முழுவதும் நடப்பதை பார்க்கிறோம் அல்லவா! இந்நிகழ்ச்சிக்குப் பெயர் “சீதேவி” வாங்குதல் என்பது. இறந்தவர் பயன்படுத்தி பாதுகாத்த விதையினை, அவர் மறந்தாலும், அவரின் சந்ததியினர் பயன்படுத்தி வாழ வேண்டும் என்கிற மங்களகரமான நம்பிக்கைக்குதான் சீதேவி வாங்குதல் என்பது. பிணம் வெளியே போக, அவரின் விதை வீட்டிற்குள் வருகிறது. விதை பாதுகாப்பில் தமிழர்களுக்கு எத்தனை அக்கரை.
ஈன, எதற்காக இதன் உள்நோக்கம் என்னவெனப் புரிகிறதோ இல்லையோ, அத்திகரானாலும், நாத்திகரானாலும் இந்தச் சடங்கு எல்லோர் வீட்டிலும் நடக்கிறதுதான். இந்த நம்பிக்கையை மட்டும் மூட நம்பிக்கை என்று யாரும் விடவில்லை. விதை பாதுகாப்பு என்பது நம் பண்பாடு. ஆயிரம் காலத்துப் பயிர் காக்கும் பாரம்பரிய வழிமுறை; நம் நாகரிகம்; வாழ்வியல் கலை.வாழை அடி வாழையாய் மனித இனம் தழைத்துச் செழித்து வளர வேண்டும் என்கிற மனித நேயம்; உயிர்ம்ம நேயம்; உலகுக்கான வாழ்வியல் காப்பீடு.
பொதுவாக எல்லா விவசாயிகள் வீட்டிலும் விதை பாதுகாக்கப் பட்டு இருக்கும்.” வித்து இல்லாதவன் சொத்தை” என்று நம்பிய காலம் அது. மிகச் சொற்ப அளவு ஏக்கர் – ஏக்கர்காரர்கள். கோட்டைக் கட்டி விதை பாதுகாப்பு செய்ய வேண்டியதில்லை. மிகச்சொற்ப விதை போதுமே! கோட்டை அளவு விதை தேவையில்ல. இவர்கள் விதை பாதுகாத்து வைத்திருபவர்களிடம் விதை நெல்லாகவோ, அல்லது நாற்றாகவோ பெற்றுப் பயன்படுத்திக் கொள்வார்கள். எல்லாமே பெரும்பாலும் பண்டமாற்று அல்லது “உழைப்பு பங்காளி” முறை. சமுதாய சகோதரத்துவ முறை. அதாவது கோட்டை நெல் வைத்திருப்பவர்கள் விதை தெளிக்கும் போது, இவர்களும் கூட இருந்து விதை தெளிப்புக்கு உதவி செய்துவிட்டு தங்களுக்கு வேண்டிய விதை நெல்லை பெற்றுச் செல்வார்கள். எல்லாமே “கூட்டுறவு வாழ்க்கை” முறை.
உழைப்புக்கும் காசு இல்லை. விதை நெல்லுக்கும், நாற்றுக்கும் காசு இல்லை. அப்படியும் ஒரு காலம் இருந்தது என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்த கொள்ள வேண்டும்.
“மூட்டை விலை கோட்டைக்கு” என்பது தமிழ்நாட்டுப் பழமொழி வரையறை. அதாவது ஒரு மூட்டை நெல் என்பது 24 மரக்கால். ஒரு கோட்டை நெல் என்பது 18 மரக்கால்.
மூட்டை நெல் என்பது முதிர்ந்த நெல், முதிராத நெல், கலப்பு நெல் ஒன்றிரண்டு பதர் எல்லாம் கலந்து இருக்கும். விதை நெல் என்பது பொறுக்கு விதை. ஆகவே இந்தத் தனிப்பட்ட உழைப்புக்காக, இவ்வளவு தான் ஈட்டம்(லாபம்) வைக்க வேண்டும் என்கிற “பண்பாட்டு வரையறை” செய்து வைத்திருந்தார்கள். அதாவது ஒரு மூட்டை நெல் ரூ. என்றால், ஒரு கோட்டை விதை நெல்லும் ரூ. சொற்ப ஈட்டம் உழைப்புக்கானது.
இப்போது விதை நெல் கிலோ . சில தானிய விதைகள் கிலோ. எல்லாமே வணிகம்தானா? வாழ்கையே பணம் தானா? அரசாங்கமே இப்படித்தானே விற்று, கற்றுக் கொடுக்கிறது?
காசாகப் பார்க்கும் பார்வை விவசாயிகளுக்கு எப்படி வந்தது?
ஊருக்கே, உலகுக்கே சோறு போடுபவர்கள் விவசாயிகள், அவர்கள் வெளியூர் சென்று இரவு தங்க நேர்ந்தால், எந்த விட்டிலும் உணவு படைத்து, படுக்க இடம் கொடுத்து அனுப்புவார்கள்.
இப்பொழுது படுக்கச்சொல்ல திண்ணையும் இல்லை; உணவளிக்க யாருமே இல்லை. பிச்சைக்காரனாக விவசாயி விரட்டப்படுகிறான். காசு வாங்கிக்கொண்டு கிராமத்துக் குடிசை கடைகளில் சோறு போடுகிறான்.ஆகவே விவசாயிகளும் விளை பொருளைக் காசாகப் பார்க்கும் பார்வையை கற்றுக்கொண்டார்கள். இதுதானே உண்மை.
எல்லோரும் பட்டினியிலிருந்து விடுபட வேண்டும்; எல்லோருக்கும் உணவளிக்க வேண்டும், அதற்காக இரவு பகல் பாராது ஓய்வு என்பது அறவே மறந்து ஆண்டு முழுவதும் அழுக்கு படிந்த சேற்று வேலை செய்து கொண்டிருப்பவன் உழவன். தனி மனித இன்பம், குடும்ப இன்பம், பிற ஊர் பார்த்து வருதல் உட்பட எல்லா இன்பங்களையும் தியாகம் செய்தவன் உழவன். விதைத்தோம், அறுத்தோம் என்றில்லாமல், எல்லா வித இயற்கைச் சீற்றத்தையும் தாங்கி அல்லல் பட்டு, ஊருக்காக, உலகுக்காக வாழ்ந்து சலித்தவன் உழவன். அனால் பசி ஆறிய பிறகு, உற்பத்தி செய்து கொடுத்த உழவரைத்தான் எல்லோரும் மறந்துவிட்டார்கள். படைத்த சோறுக்கு, உழைப்புக்கு நன்றி கூட பாராட்டுவதில்லை, நெஞ்சம் கொதிக்கிறது தானே!
  மருத்துவர் அரியூர் காசிபிச்சை அவர்களின் “மறைந்து வரும் மாண்புகள்”என்னும் புத்தகத்திலிருந்து தொகுக்க பட்டது

0 comments:

Post a Comment