நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Tuesday 26 July 2016

மரம் தான் உலகின் உரம்



திருமண ஏற்பாடு, நகைகள்,சேலைகள், ஆடைகள் வாங்கினாலும், வங்காவிட்டாலும், வசதிக்கு, சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டாலும், ஒரு சில அடிப்படை சடங்குகள் மட்டும் மாற்றப் படாமலேயே இருந்து வருகிறது.
திருமணத்திற்கு முன் 3-ம் நாள், அல்லது 5-ம் நாளில் முகூர்த்தக்கால் ஊன்றி, பந்தல் போட்டு, திருமண வேலை தொடங்கப்படும். பங்காளிகள் மாமன் மைத்துனர்,மிக நெருங்கிய உறவினர்கள், நெருக்கமான நண்பர்கள் முன்னிலையில் முகூர்த்தக்கால் ஊன்றப்படும் . முகூர்த்தக்கால் குழியில் பால் ஊற்றி கால் ஊன்றுவார்கள். பால் ஒரு மண்ணுயிர் பெருக்கி, ஊன்றப்படும் மரப்போத்து உயிர் பெற நல்லதொரு ஊட்டம்.
இது உயிர் பிடித்து மரமாக வளர்த்த காலம் ஒன்றுண்டு. பின்நாளில் நவதானியம்,பாலுடன் விட்டு, முளைக்க முடியாத, பந்தல் காலாகப் பயன்படும் காய்ந்த மரத்தை நட்டு பந்தல் அமைத்துக் கொண்டு விட்டார்கள். திருமணம் முடிந்து பந்தல் பிரிக்கும் போது இந்த முகூர்த்தக்காலும் பிடுங்கப்பட்டு விடும். இது ஒரு சரிவு நிலை.
நல்லாவூர் கிழார் பாடிய அகநானூறு 86-ம் பாடலின் செய்திப்படி, முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டு, மணல் நிரப்பி, பந்தலிட்டு மணமேடை தயாரித்தனர். இப்போதைய வீடு, வாசல், தெரு, மாடி, கட்டிடம் என்பதை சற்று மறந்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், நம் சிந்தனையை செலுத்த வேண்டும். நிலமும், நிலம் சார்ந்த வீடும் அமையப் பெற்றிருந்த காலம்.
குடியிருப்பு வீடு, இயற்கை வளம் சார்ந்ததாக, மரம் செடி கொடிகளுக்கு இடையே அமைக்கப் பட்டிருந்த காலம். இப்போது போல, எங்கோ விளையப் பெற்ற காய்கறிகள், எங்கோ விற்பனை செய்யப்படும் வாணிபக் காலமல்ல அந்தக்காலம். அவரவர் வீட்டில், அவரவர் ஊரில், அவரவர் பகுதி மண்ணில் உற்பத்தி செய்து கொண்ட காய்கறிகள் வைத்து, மன நிறைவோடு வாழ்ந்து வந்த காலம் அந்த காலம்.
“உணவெனப்படுவது நிலத்தொடு நீரே” என்பது சங்க காலம் காட்டும் தமிழர்களின் வாழ்வியல் நெறி.
மண் எப்படிப்பட்டதோ, அதற்கேற்றாற்போல, நீர்வளம்; இவ்விரண்டும் எப்படிப்பட்டதோ, அதற்குகேற்றபடியான விளைபொருள் உற்பத்தி. அதற்குகேற்றபடியான உடல் அமைப்பு, உடல் நிறம், வாழ்கை முறை எல்லாம்.
எது எப்படியிருப்பினும், தமிழர் திருமணங்களில் முகூர்த்தக் கால் ஊன்றி, திருமணத்தைத் தொடங்குவது நம் மரபு. திருமணத்திற்கு முன்னதாக ஊன்றப்படும் முகூர்த்தக்கால் வீட்டிற்கானது. இது செழித்து வளர்ந்து மரமாகி நிழல் தந்து, உயிர் வளி பரப்பி, வீட்டை வீட்டாரை காப்பாற்றுவது.
காலூன்றிய அன்றே நவதானியம் எடுத்து முளை கட்டி வைத்து, திருமணத்தன்று முளைப்பாறி வைத்து, மண் வணக்கம், மலர் வணக்கம், விதை நெல் வணக்கம் முடித்து திருமணம் நடைபெறும்.
அதே போல திருமணத்தன்று மணமேடையில் ஒரு முகூர்த்தக்கால் வைத்து, பூ பொட்டு மரியாதை எல்லாம் செய்து, மணவிழா முடிந்தபின், இம்முகூர்த்தக் காலை மணமகன் எடுத்துவர, மணமகள் மேடையில் பயன்படுத்தப்பட்ட பூசனை நீரை, புதுப்பானையில் எடுத்து வர, ஆற்றங்கரை, ஏரிக்கரை, போன்ற பொது இடத்தில், மணமகன் குழிபறித்து நட, மணமகள் கொண்டு வந்த மங்கல நீர் ஊற்றி, மரம் நட்டு வருதல் இன்றும் நாம் கடைபிடித்து வரும் பண்பாடு. முளைப்பாறி கட்டிய நவதானிய தளிர்களை, நீர்நிலைகளில் விட்டு வருவார்கள். எங்கோ சென்று வேர் பிடித்து வளர்ந்து பசுமை காட்டும் என்கிற எதிர்பார்ப்பு நல்லது.
பல இடங்களில், வெறும் சம்பிரதாய சடங்கு. வைக்கப்படும் போத்து கூட உதயம் போத்தாக இருந்தது, இருக்கிறது. ஆனால் பல இடங்களில், மூளைக்க முடியாத மூங்கில் கழியை வண்ணம் பூசி, அழகு படுத்தி, மணவிழா மேடையில் ஊன்றி வைக்கப்படும் வெறும் சடங்கு. சிலர் வேம்பும் அரசும் சேர்த்து பால் ஊற்றி நட்டு முகூர்த்தக்கால் ஊன்றுவதும் உண்டு.
திருமண மண்டபத்தில் நிரந்தரமாக ஒரு மூங்கில் கழி இருக்கும்.இதுவே அங்கு நடக்கும் அத்தனை திருமணங்களுக்கும் நடப்படும் முகூர்த்தக்கால், கேலிக்கூத்து போல தோன்றுகிறதல்லவா?!
திருமணத்தன்று நடப்படும் முகூர்த்தக்கால் நாட்டிற்கானது. ஆகவேதான் பொது இடத்தில் நட்டார்கள். என்றோ பிறக்கப்போகும் குழந்தைக்கான மூச்சுக்காற்றை உற்பத்திசெய்து கொடுக்க, திருமணத்தன்றே முகூர்த்தக்கால் ஊன்றும் செயல்பாடு. இதுவன்றோ சமுதாயப்பணி; பல்லுயிர் ஓம்பும் பண்பாடு வளர்ப்பு எதுதானே. எத்தனை தொலை நோக்குப் பார்வை! எத்தனை பெரிய சமுதாய அக்கறை! வாழ்வியல் பண்பாடு எத்தனை உயர்ந்தது! மலைப்பாக இருக்கிறது.
பூமித்தாயின் ஆடைதான் பசுமையான மரம், செடி, கொடி என்று நம்மவர்கள் எப்படி கற்றார்கள்! பூமித்தாயின் நுரையீரல்தான் மரங்கள் என்கிற நுட்பத்தை அறிந்து தமிழ் இனத்தின் பண்பாடாக மரம் வளர்த்தலை எப்படி கடைபிடித்தார்கள்! இதில் என்னொரு சிறப்பும் உண்டு.
உதயம் மரம் அதன் பட்டையிலிருந்து இறக்கப்படும் கசாயம் மருத்துவ குணம் கொண்டது. கர்ப்பப்பை கோளாறுகளை அகற்றக்கூடியது. உதயம் பட்டை கசாயம் உட்கொண்டு வந்தால் கர்ப்பப்பை கட்டி, பெரும் போக்கு, மலட்டுத்தன்மை போன்ற எந்தவித கர்ப்பப்பை நோயும் அண்டாமல் திடகாத்திர உடலோடு மகப்பேறு செல்வம் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்.
அதாவது மனிதர்களை உற்பத்தி செய்து கொடுக்கும் விலை நிலம் தாய். அந்த தாய் செழிப்பாக இருந்தல்தானே, செழிப்பான குழந்தைகளை உற்பத்தி செய்து தர முடியும். ஆகவே தாய்மையை, தாய்குலத்தை, மனிதகுல விளைநிலத்தை பாதுகாக்கத்தான் உதயமர முகூர்த்தக்கால் ஊன்றும் பண்பாடு.
ஒருவர் இருவர் என்று இல்லாமல், நாடு முழுதும் நீக்கமற நிலவும் பண்பாடாக, திருமணத்தன்று முகூர்த்தக்கால் ஊன்றி, மரம் வளர்ப்பதை,எத்தனை நுண்ணறிவோடு, ஒட்டுமொத்த சமுதாயமும் கடைபிடிக்க செய்திருக்கிறார்கள்! திருமணம் நடக்காத வாழ்க்கை இல்லை; வீடு இல்லை, ஆகவே எல்லோர் வீட்டிலும் முகூர்த்தக்கால் ஊன்றினார்கள். மரம் நட்டு வளர்த்தார்கள். ஆக, மரம் நடுதல் என்பது கட்டயப்படுதப் படாமலேயே, கட்டாயமாக செய்ய வைத்துள்ள நம் நாகரிகத்தை எத்தனை புகழ்ந்தாலும் தகும் அல்லவா!
இன்றைக்கு மரம் நடச்சொல்லி எந்தெந்த வழியிலோ அறிவுரை கூறுகிறோம், வேண்டுதல் விடுக்கிறோம். வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! மரம் மழை தரும் வரம்!- என்பன போன்று போக்குவரத்து வண்டிகளிலெல்லாம் விளம்பரம் செய்கிறோம். மரம் வளர்க்கச் சொல்வதற்காகவே தனியொரு வன இலாகா; இலவசமாக மரக்கன்றுகள் வினியோகம்; பள்ளிதோரும் பசுமைத்தாயகம் அறிவிப்பு, பள்ளி, கல்லூரிகளின் நாட்டு நலத்திட்டத்தின் மூலம் ஏகப்பட்ட மரக்கன்று நடல். ஆனாலும் இத்தனைக்குப் பிறகும் பொதுமக்கள், மரம் நடுதலின் அவசியத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
மரம் வைக்கும் வேகத்தைவிட, மரம் வெட்டும் வேகம் அதிகமாகத்தான் இருக்கிறது.
“ஒசோன் மண்டல ஓட்டையைத் தைக்க புதிதாய் ஊசி கண்டுபிடி” என்று பாடினான் இலங்கவிஞன் தாராபாரதி. எப்படி தைப்பது? எதனால் தைப்பது? அதற்கு அவனே வழியும் சொன்னான் “பட்டமரம் ஒன்று வெட்டும்பொழுது பக்கத்தில் புதிதாய் நட்டுவிடு” அவ்வளவுதான்.
தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு “பட்டமரமானாலும் வச்சி வெட்டனும்”. மரம் பட்டுப்போய் விட்டாலும் கூட, அவசரப்படாமல் நூறுமுறை சிந்தித்து, பதிலியாக, கன்று நட்டு, வளர்த்து நன்றாக வேர் பிடித்த பிறகு பட்ட மரத்தை வெட்ட வேண்டும் என்பது பொருள்.
உலக உயிர்களுக்கான உணவு சமைக்கும் கேந்திரமே மரம்தான்.
சூரிய சக்தியை கிரகித்து, நாம் விடும் கரியமில வாயுவை கிரகித்துக் கொண்டு, நிலத்திலிருந்து(கிடைக்காத பொது காற்றிலிருந்து) நீரை எடுத்துக்கொண்டு, மனிதனுக்கு வேண்டிய உயிர்வளி(ஆக்சிஜன்) கொடுப்பதாக இன்று கண்டுபிடித்த அறிவியல் கூற்றை, அன்றே எப்படி கற்றுணர்ந்து கடைப்பிடித்தான் தமிழன்?
இது தான் ஒளிச்சேர்க்கை, இதற்கு சூரிய ஒளி கட்டாயம் அவசியம். இல்லையேல், உற்பத்தி என்பதே இல்லை என்பதை,” சூரியனைப் பகைத்தால் சோம்பிவிடும் வாழ்க்கை” என்பதை எத்தனை ஆழமாகக் கூறியிருக்கிறான்!
வள்ளுவர் தமது முதல் திருக்குறளில், ஆதித்தியன், ஆதி பகவன் என சூரியனைத்தான் உலக உயிர்களின் ஜீவநாடி என்று வணக்கம் செலுத்தியுள்ளதை ஆழ்ந்து சிந்தித்தறிய வேண்டும்.
ஆக முன்னைய தமிழர்கள் தங்களின் கட்டுப்பாடான பண்பாட்டில், சமுதாயத்திற்கான நல்லதை சிந்தித்து கடைபிடித்து ஒட்டுமொத்த சமுதாயமே பங்கெடுத்துப் பயன்கொள்ளும் முறையில் வடிவமைத்துச் சென்றுள்ளார்கள் என்பது நமக்கெல்லாம் பூரிப்பு தரக்கூடிய அறிவியல் செய்திதானே!
சூரியன் கூட பகைவனா? குழந்தைகளை சூரிய ஒளி படாமல் எப்படியெல்லாம் வதைக்கிறோம்! இதுதான் அறிவியல் கற்றுக் கொடுக்கும் நாகரிக வாழ்க்கையா? சிந்திக்க வேண்டாவா?
மரம் வளர்ப்போம்! மண்ணுயிர் காப்போம்! மரம்தான் உலகிற்கான உரம்.
மருத்துவர் அரியூர் காசிபிச்சை அவர்களின் “நோயற்ற வாழ்வுக்கான இருநூறு நுட்பங்கள்”என்னும் புத்தகத்திலிருந்து தொகுக்க பட்டது

0 comments:

Post a Comment