வீட்டுக்கொரு நாட்டு மாடு
புதுமனைப் புகுவிழா(கிரகப் பிரவேசம்). லட்சக்கணக்கில் முதலீடு செய்து கட்டப்பட்ட வீட்டிற்குள் குடியேறும் விழா. சுற்றமும் நட்பும் சூழ, நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து குடியேறுதல் நிகழ்ச்சி, நாடு முழுதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
புதுமனைப் பொழிவுடன் விளங்கும் விட்டிற்குள், மந்திர ஆலாபனையோடு குடியேறும்போது, பசுவுடன் குடி புகுதல் என்பதை மங்களகரமாகக் கருதுக்கிறோம்.
குளித்து முழுகி தலையிலே புத்தாடை கட்டி, மாலையும் கழுத்துமாக, பூவும்பொட்டுமாக, பசு தான் பெற்ற கிடெரிக் கன்றுடன் வீட்டாரோடு புதுமனைப் புகுந்து வெளியேறுவதைக் கண்டிருக்கிறோம். சொந்த மாடு இல்லாதவர்கள் வாடகைக்கு மாடு கொண்டு வந்து, நடிக்கச் செய்து, வாடகைப் பணமும் கொடுத்து அனுப்பி விடுவதைப் பார்க்கிறோம். அதாவது புதுமனைப் புகுவிழாவில் பசுவுடன் நுழைவது தேவைப்பட்ட ஒன்று என்று எண்ணுகிறோமே ஒழிய, பெரும்பலானவர்களுக்குப் பொருள் புரியாதச் சம்பிரதாயச் சடங்கு! அவ்வளவுதான். அடுக்கு மாடிகளில் வீடு வாங்கி குடியேறும் போது மாட்டைக் கொண்டுபோக முடியாமல், பசுவும் கன்றும் பொம்மையாக எடுத்துச் சென்று பசு நுழைவதாக சடங்கு. இதற்குப் பெயர் பேக்கேஜ் என்பதாம். கோமாளித்தனமாக இருக்கிறது.
பசு என்பது வணக்கத்திற்குரிய கோமாதா, செல்வத்திற்கெல்லாம் பெருஞ்செல்வம், லட்சமி வளம் நிறைந்தது. ஆகவே முதல் நுழைவு பசுஞ்செல்வத்துடன் தான் என்பது வளமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என்பது பலரின் நம்பிக்கை, நல்லது.
தொழுது வணங்க வேண்டியவைகள் மாடுகள். அதனால்தான் அவைகள் தொழுவத்து மாடுகள். தொழுது வணங்கப் படவேண்டிய மாடுகள் கட்டப்படும் இடம் தொழுவம் ஆனது.
தொழுது போற்ற வேண்டிய அளவிற்கு பசுவிடம் என்ன இருக்கிறது? மாடுவளர்ப்பை மாபெரும் கடமையாக எண்ணினார்களே எப்படி? மழலைச் செல்வம் இல்லாது போனால் கூட மாடு வளர்க்கத் தவறவில்லையே எப்படி?
உலக உயிர்களைப் போல அதுவும் ஒரு ஜிவன்; தீவனம் எடுக்கிறது; பால் கொடுகிறது; அவ்வளவுதானே! என்று நினைப்பாரும் உண்டு.
இதன் அடிப்படையில்தான், மாடு வளர்ப்பு என்பது ஒரு அசிங்கப்பட்ட, தரமற்ற கேவலப்பட்ட, படிப்பறிவு அற்ற பாமரர்கள் செய்யும் தொழிலாகக் கருதப்பட்டு விட்டது.
கவனம் செலுத்த ஆள் இன்றி, மேய்ச்சல கிடைக்க வாய்ப்பின்றி, கால்நடைகள் பசியால் பரிதவிப்பதை, பார்க்க சகிக்காமல் வந்த விலைக்கு விற்று விட்டு, வேறு தொழல் நோக்கி நகரத் தொடங்கி விட்டார்கள் கிராமத்தார்கள்.அதனால், கால்நடைகளின் எண்ணிக்கை, கடந்த பத்து ஆண்டுகளில் மளமளவெனச் சரிந்து, உலகின் முதல் இடத்தில் இருந்த நிலை இழந்து, பால்பொடி இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா வந்துவிட்டது.
மனிதன் வளமாக வாழவேண்டும் என்றால் வளமான உணவு கொள்ள வேண்டும். வளமான உணவு, வளமான நிலத்திலிருந்துதான் கிடைக்க முடியும். வளமான நிலம் வேண்டுமென்றால், நிலத்திற்கு வளமான உணவு இட வேண்டும். வளமான உணவு என்பது தேவைப்பட்ட அளவு கால்நடைக் கழிவுகளே. பட்டினி கிடக்கும் நிலத்தில் சரியான, நிறைவான உற்பத்தி கொடுக்க முடியாது, உயிருள்ள நிலம் என்பது கோடிக்கணக்கான சிற்றுயிர்களை தன்னிடம் கொண்டது. சாணத்தில் உள்ள கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள்தான் நிலத்திற்கான வளமை கூட்டும் சிற்றுயிர்கள்.
ஆகவே, மனிதன் வளமாக வாழ வேண்டுமானால், வளமான கால்நடை வளர்த்தாக வேண்டும்.
அப்படியானால், மனித வளம் என்பது கால்நடை வளத்தில் அடங்கியிருகிறது. இதனைப் புரிந்துதான் மாட்டோடு வாழப் புகுந்தான் முன்னைய தமிழன். பசுமாட்டின் நுழைவு அதற்காகத்தான்.
கால்நடை வளர்ப்பு என்பது, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் காக்க ஏற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான தொழில்.
உலகைக்காக்கும் சக்தி என்பது நிலத்தினுள் உறங்கிக் கொண்டிருக்கிறது. உறங்கிக் கொண்டிருக்கும் சக்தி, தாவரங்கள் மூலம் எழுப்பிவிடப்பட்டு நிலத்திற்கு வெளியே கொண்டு வரப்படுகிறது. விழித்தெழுந்த சக்தி, கால்நடைகளின் வழியே நடமாடுகிறது.(Energy sleeps in earth; Energy wakes in plants; Energy walks in animals)
ஆக, இது ஒரு சுழற்சி. சுழற்சிக்கான சங்கலி நிலம்; நிலத்திலிருந்து மரம், செடி கொடிகள், அதனை உண்ட மனிதன், ஆடு மாடுகள்; ஆடு மாடுகளின் கழிவுகள் இலை தழைகளுடன் சேர்ந்து மீண்டும் நிலத்திற்கான உணவு. இந்த சுழற்சி சங்கிலியில் கால்நடை ஒரு கரணை.
ஒரு கரணை அறுந்துவிட்டால், எத்தனை பெரிய பலம் பொருந்திய சங்கிலியாக இருந்தாலும் பயன் இல்லையல்லவா! ஆக, சங்கிலியின் உறுதி என்பது உறுதியற்ற கரணையில் இருக்கிறது.
இந்த அடிப்படையில்தான் பசு வளர்த்தார்கள் நம் முன்னோர்கள். எல்லா உண்மைகளையும் மறந்து விட்டோம்.
அதிலும், பசுக்களை உயிர் சங்கிலியில் ஒரு அங்கமாகப் பார்த்தார்களேயன்றி, பால் கொடுக்கும் எந்திரமாகப் பார்க்கவில்லை.
நிலமும் உயிர் வாழ வேண்டும்; அதற்காகச் சாப்பிட வேண்டும். மாடும் உயிர் வாழ வேண்டும்; சாப்பிட வேண்டும். மனிதனும் உயிர் வாழ வேண்டும், சாப்பிட வேண்டும். மூன்றிற்கும் ஒத்த மதிப்பு. மனிதனும் கால்நடையும் ஒன்றுதான்; நிலமும் ஒன்றுதான், ஒன்று உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்பது உயிரியலில் இல்லவே இல்லை.
பாலுக்குப் பயன்படாத மாடு கவனிக்கப் படாமலேயே மடிய விடுவது, கிடைத்த அளவிற்கு போதும் என்று அடிமாட்டிற்கு விற்றுத் தொலைப்பது என்னவித பண்பாடு? எப்படி உயிர்ம நேயம்?
பயன் கொடுக்காத பசு பட்டினி கிடக்க வேண்டியது தானா?
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தன்நோய் போல் போற்றக்கடை(குறள்-)
பிற உயிர்க்கு நேரும் துன்பத்தை, தமக்கு வந்த நோயாகக் கருதி, அதனை காக்கவில்லை என்றால் தாம் பெற்றுள்ள அறிவினால் யாது பயன்?
“பசு மாட்டுப்பாவம் பரலோகம் போனாலும் விடாது” என்கிற பழமொழி நம்நாட்டில் தான் இருக்கிறது. புரிய வைக்க முயற்சி செய்வோம், கற்றுக் கொடுப்போம்! இதுவே எதிர்காலத்தைக் காக்கும் கவசம்.
மருத்துவர் அரியூர் காசிபிச்சை அவர்களின் “மறைந்து வரும் மாண்புகள்”என்னும் புத்தகத்திலிருந்து தொகுக்க பட்டது
Nice post
ReplyDelete