நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Monday 19 June 2017

வாழையில் எனது பயணம்..!



வாழை என்பது, கிராமபுற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக செயல்படும் ஒரு அமைப்பு.  தற்போது விழுப்புரம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் செயல்பட்டுகொண்டிருக்கிறது.  மேலும் தகவலுக்கு www.vazhai.org க்கு செல்லவும்.  இந்த பதிவில் வாழையில் எனது பயணத்தை நினைவுகூற உள்ளேன்.

எனது கல்லூரி படிப்பை முடித்து சென்னையில் பணியில் அமர்ந்த வருடம் 2010.  அலுவலகத்தில் சக பணியாளரிடம் இருந்து வாழை பற்றிய முதல் அறிமுகம் கிடைத்தது.  மிகவும் ஆர்வமாக இருந்தது காரணம் என் வீட்டில் நான் ஒரு முதல் பட்டதாரி.  ஆகையால் என் கல்வியில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு வழிகாட்டி இல்லாமல் பல சிரமங்களை அடைந்துள்ளேன்.  ஆகையால் நான் ஒரு வழிகாட்டியாக இருக்க பலமுறை எண்ணியதுண்டு.  மேலும் இயல்பிலே எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்பிப்பதில் பெரும் ஆர்வம் இருந்தது.  என் இத்தகைய எண்ணங்களுக்கு வாழை ஒரு சரியான தளமாக இருக்கும் என்று தோன்றியது.  ஆகையால் உடனே தொடர்புகொண்டு என்னை வாழை அமைப்போடு இணைத்து கொண்டேன்.
 
எனக்கு மிக நன்றாக நினைவில் உள்ளது என் முதல் வாழை பயிற்ச்சி பட்டறை பயணம்.  அன்று (ஜனவரி 2011) பட்டறைக்காக கிளம்பி கொண்டிருந்தேன். மனம் முழுக்க ஆவல், பயம், கேள்விகள், குதூகலம், குழப்பம், எதிர்பார்ப்பு, தயக்கம் இன்னும் பல உணர்வுகள் வியாபித்திருந்தன.  இதில் நான் சென்னைக்கு வந்தே சில மாதங்கள் தான் ஆகியிருந்தது.  மிகுந்த தயக்கத்திற்கு நடுவில் உள்ளுணர்வின் உந்துதலினால் வீட்டை விட்டு கிளம்பினேன்.  வெளியே சென்னை மஞ்சள் நிற ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது.  எனக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரு ATM அருகே வந்து நிற்கும்படி தகவல் முன்னரே தரப்பட்டிருந்தது.  சரியாக இரவு 9:30 IST க்கு (பிற்பாடு VST பயன்படுத்த கற்றுகொண்டேன் :-) ) தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன்.  ATM அருகே ஒரு சிறிய மக்கள் கூட்டம் இருந்தது.  மிகுந்த தயக்கத்துடன் அருகில் சென்றேன்.

“என்ன வாழைஆ?” என்று ஒருவர் வினவினார்.  “ஆமாம் வாழை தான்” என்று பதிலளித்தேன்.  உடனே புன்னகையோடு கைகுலுக்கினார்.  சிறிது நேரத்திலேயே அனைவரும் அறிமுகம் ஆகிவிட்டார்கள்.  அப்போது தெரியாது அவர்களில் பலர் எனக்கு நெடும்கால நண்பர்களாக மாறப்போகிறார்கள் என்று.

சரியாக 9:30 VST க்கு :-) வாழையில் முன்பதிவு செய்திருந்த பேருந்து ஒன்று தாம்பரம் ரயில் நிலையத்திற்கு சற்று தள்ளி வந்தடைந்தது.  அனைவரும் பேருந்தில் சென்று ஏறினோம். பயணம் தொடங்கியது.  பல புதிய முகங்கள்.  பல அறிமுகங்கள்.  

“இங்க இட்லி இன்னும் வரல...  பரோட்டா எங்கப்பா…?”  

“இங்க கொஞ்சம் சாம்பார்..” , “தண்ணி கொஞ்சம் கொடுங்க ப்ளிஸ்”, “வாங்க ஜி வாங்க, எப்டி இருக்கீங்க”

என்று பல குரல்கள் ஒலித்தது.  சற்று நேரத்தில் என் கையிலும் ஒரு இட்லி பொட்டலம் இருந்தது.  சாப்பிட்டு முடித்தேன்.  மேலும் பல அறிமுகங்கள் நிகழ்ந்தன.  சிறிது நேரம் பட்டறை பயிற்சி குறித்து ஆங்காங்கே சிலர் பேசிகொண்டிருந்தார்கள்.  திடீரென்று ஒரு பெருங்குரல் அனைவரையும் ஒன்றினைத்தது.  என்னவென்று யோசிப்பதற்குள் ஆனைவரும் பாட ஆரம்பித்தார்கள். சற்று நேரத்தில் நானும் பாடிகொண்டிருந்தேன்.  மிக மகிழ்ச்சியாக பயணம் தொடர்ந்தது.  பல புதிய நண்பர்களை பெற்றேன்.  என் மனதில் இருந்த அனைத்து குழப்பங்களும் தீர்ந்தன.  ஒரு மணி நேரத்தில் அனைத்து புது முகங்களும் தெரிந்தவர்களாகி விட்டனர்.  தயக்கங்கள் காணமல் போயின.  இவ்வாறு எனது முதல் பயிற்சிப் பட்டறை சிறப்பாகத் தொடங்கியது.  


மறுநாள் காலை பலர் வெகு சீக்கிரமாக எழுந்து பட்டறைக்கு தேவையான பல ஏற்பாடுகளை செய்தார்கள்.  சுவற்றில் ஒரு கால அட்டவணை ஒன்று இருந்தது அதில் அந்த பயிற்சி பட்டறையில் நடைபெற உள்ள வகுப்புகளை பற்றிய குறிப்பு இருந்தது.  அதை பார்க்கும் போதே, அந்த பட்டறைக்காக அவர்களின் பல நாட்கள் உழைப்பு தெரிந்தது.  வகுப்புகளும் சிறப்பாக இருந்தது.  பட்டறையின் முடிவில் பல கேள்விகள்,  ஐயங்கள் என் மனதில் பிறந்திருந்தன.

அடுத்த பட்டறையை பற்றி யோசிக்கும் போது, நான் வாழையில் இணைந்த நோக்கத்தை நோக்கி பயணிக்க எனது முதல்  அடியை வைக்க விரும்பி  ஆங்கில குழுவில் இணைந்தேன் (இணைக்கப்பட்டேன் :-) ).   குழு நண்பர்களிடம், வகுப்பு குறித்து பல விவாதங்கள் நடைபெற்றன.  நானும் அவற்றில் கலந்துகொண்டேன். அதில் என் கேள்விகளையும் ஐயங்களையும் கேட்டு தெரிந்து கொண்டேன்.  எனக்கு தெரிந்தவற்றை எனது பாணியில் நானும் பட்டறையில் பயிற்சி அளித்தேன்.  இவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து ஒரு குறிப்பிட தகுந்த ஒரு நிகழ்வு நடைபெற்றது.  அந்த நிகழ்வானது வாழையில் நான் மிகவும் ஆழமாக பயணிக்க வழிவகுத்தது.

வாழையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது மட்டும் இல்லாமல், ஒவ்வொருவருக்கும் ஒரு வழிகாட்டியை அறிமுகபடுத்துவார்கள்.  அவ்வழிகாட்டியானவர் அந்த மாணவருடன் வாழையில் தொடர்ந்து பயணிப்பார்.   மேலும் வாழையில் இதற்காகவே சிறப்பு பயிற்சி வகுப்புகள் அவ்வபோது நடத்தப்படும்.  அதிலும் பங்கேற்று பயிற்சி பெற்றேன்.  இதுபோல கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து என்னை ஒரு வழிகாட்டியாக ஒரு வாழை தம்பிக்கு அறிமுகபடுத்தினார்கள்.  அன்று முதல் என் வாழை பயணம் முற்றிலுமாக மாறியது.  ஆங்கில வகுப்புகளுக்கு பாடங்களை தயார் செய்வதோடு மட்டும் இல்லாமல் என் தம்பியின் பலம் பலவீனத்திற்கு ஏற்றவாறும் பாடங்களை தயார் செய்ய ஆரம்பித்தேன்.  பட்டறையில் என் தம்பியோடு சேர்த்து மற்ற தம்பி தங்கைகளுடன் நிறைய நேரம் பகிர்ந்து கொண்டதில் ஒரு உண்மையை உணர்ந்தேன்.  நாம் அங்கு கற்பிப்பதைவிட அங்கு நாம் கற்பதுதான் அதிகம்…!

பெரும்பாலான வழிகாட்டிகளுக்கு ஏற்படும் ஆரம்பகால சிக்கல்கள் பலவும் எனக்கும் ஏற்பட்டது.  அதில் முக்கியமானது, எனக்கும் என் தம்பிக்கும் இடையிலான புரிந்துணர்வு மிகவும் மேலோட்டமாகவே இருந்து வந்தது.  எப்படியாவது என் தம்பியின் வட்டத்திற்குள் நான் செல்லவேண்டும் என்று எண்ணி அவருடைய ஆர்வங்களை எல்லாம் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.  அவர் மற்றவர்களுடன் பேசுவதில் பெரும்தயக்கம் காண்பிப்பவராக இருந்தார்.  அவருக்காக வாழை கலை நிகழ்ச்சி நேரத்தில் மொக்கையாக இருந்தாலும் ஒரு நாடகத்தை உருவாக்கி அவரை நடிக்கவைப்பேன்.  அவர் கைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.  வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவருடன் சேர்ந்து விளையாடுவது,  அவர் சுற்று சூழலை பற்றி தெரிந்துகொள்வது, அவரின் நண்பர்களை பற்றி கேட்பது போன்ற பல விவரங்களை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவரிடம் கேட்டு அறிந்துகொண்டிருந்தேன்.  வாழையில் வருடத்திற்கு ஒரு முறை நாங்கள் எங்கள் தம்பி தங்கைகளின் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்.  இதை ஒருபோதும் தவறவிட்டதில்லை, யாரும் தவறவிடக் கூடாத ஒரு அனுபவம். மேலும் வாழையில் நாங்கள் பெரும்பாலும் ஒன்றாகவே உறங்குவோம், ஒன்றாகவே உணவு உண்போம்.  ஒன்றாகவே அரட்டை அடிப்போம்.  இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக அவரின் நட்பையும் நம்பிக்கையையும் பெற்றேன்.  எழுத்தில் சுருக்கமாக தெரிந்தாலும், இந்நிலையை அடைய கிட்டதட்ட மூன்று வருடங்கள் ஆனது.  இப்போது நாங்கள் எந்த விஷயத்தை பற்றியும் மிக சுலபமாக விவாதித்து கொள்வோம்.  கிட்டதட்ட ஐந்து வருடங்கள் அவருடன் பயணம் செய்தேன்.  இதில் நான் கற்றது மிக அதிகம்…!

என் தம்பி இப்போது 12ஆம் வகுப்பு முடித்து பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பித்து உள்ளார்.  அவருக்கு நான் வழிகாட்டியாக அறிமுகபடுத்தப்படும் போது அவர் 7ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்.  இந்த பயணத்தில் ஐந்தாவது வருட இறுதியில் என் பணி நிமித்தம் காரணமாக வெளிநாடு செல்லவேண்டி இருந்தது.  இதனால் நேரில் சந்திக்கும் வாய்ப்பும், வாழை பயிற்சி வகுப்பிற்கு செல்லும் வாய்ப்பும் மிகவும் குறைந்துவிட்டது.  இருப்பினும் இப்போது நாங்கள் முன்னை விட அதிகம் தொலைபேசியில் பேசுகிறோம்.  இத்தகைய ஒரு அனுபவத்தை பெற காரணமாக இருந்த வாழை அமைப்பிற்கு நன்றிகள் பல..!  இம்மாதிரியான அனுபவங்களை ஆனைவரும் நிச்சயம் வாழ்வில் பெறவேண்டும்.


  • நன்றி :-)