நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Saturday 13 May 2017

நானும் அல்சரும்..! - தொடக்கம்




"என்னடா இது தலைப்பு நானும் அல்சரும்..?"
என்று யோசிக்கிறீர்களா?  ஆம் இந்த கட்டுரையில் வயிற்று புண் பற்றி தான் பேசப்போகிறேன்.   எனக்கு நன்றாக நினைவில் உள்ளது எனது முதல் வயிற்று புண் எரிச்சல்.  ஒருநாள் என் தம்பியோடு சேர்ந்து கிணற்றில் குளித்து கொண்டிருக்கும்போது திடீரென்று நெஞ்செரிச்சல் வந்தது.  ஏன் என்று தெரியவில்லை அந்த எரிச்சலை பொருட்படுத்தவும் இல்லை.  நான் அப்பொழுது கிட்டத்தட்ட பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் வயது 17.  அன்றிலிருந்து கிட்டத்தட்ட எனது 28 ஆம் வயதில்தான் அதற்க்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்தேன்.  இந்த கட்டுரையில் என் வயிற்று புண்ணை சரி செய்வதற்காக நான் மேற்கொண்ட பல விசயங்களையும் கடந்து வந்த பாதையையும் விவரிக்க இருக்கிறேன்.  இப்போது அல்சர் உள்ளவர்கள் இந்த கட்டுரையை நிச்சயம் படியுங்கள் இது உங்களுக்கான ஒரு தீர்வாக இருக்கும்.

அல்சரின் ஆரம்ப காலத்தில் நான் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை.  அதன் விளைவாக பிரச்சனையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே சென்றது.  ஒரு கட்டத்தில் நான் என்ன சாப்பிட்டாலும் அடுத்த ஒரு மணிநேரத்தில் எனக்கு நெஞ்செரிச்சல் வந்துவிடும் என்ற நிலைமை உருவாகிவிட்டது.  மிகவும் வருத்தமாக இருந்தது.  நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டவன் நான்.  ஆகையால் இந்த நெஞ்செரிச்சல் ஒரு பெரும் வருத்தத்தை எனக்கு உருவாக்கிவிட்டது.  சரி, இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு நிலைமை மோசமானது எனது 25 வது வயதில்தான்.  மிக தீவிரமாக ஆராய ஆரம்பித்தேன்.  நெஞ்சு எரிச்சலை சரி செய்ய எந்த அளவுக்கும் செல்ல தயாராய் இருந்தேன் அனால் அலோபதி மருத்துவம் மட்டும் வேண்டாம் என்ற முடிவை எடுத்திருந்தேன்.  இந்த முடிவு எவ்வளவு முக்கியாமான முடிவு என்பதை என் பிரச்சனை சரி ஆனா பிறகு உணர்ந்தேன்.  சரி விசயத்திற்கு வருவோம்.  எனக்கு வந்த பிரச்சனையை சரியாக சொல்ல வேண்டுமெனில், ஆங்கிலத்தில் GERD (Gastroesophageal reflux disease) என்பார்கள்.

“என்னப்பா இது GERD? ஒன்னும் புரியலையே..”

GERD என்பது, நாம் உண்ணும் உணவு சாப்பிட்ட சில மணி நேரத்திற்கு பிறகு சிறிது நேரத்தில் நமது வாயிற்கு திரும்ப வருவது.  அவ்வாறு வரும்போது மிகவும் புளிப்பு சுவையாக இருக்கும்.  அது வேறொன்றும் இல்லை நமது வயிற்றின் ஜீரண அமிலம்.  உணவு மண்டலத்தை பற்றி பேசும்போது நாம் இவ்வாறு ஒரு வாக்கியத்தை கேட்டிருப்போம் “தலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் தண்ணி திரும்ப வாய்க்கு வராது”  இதற்க்கு காரணம் நம் வயிறும் உணவு குழலும் இணையும் இடத்தில் ஒரு சவ்வு உள்ளது.  அந்த சவ்வானது ஒரு பக்கம் மட்டுமே திறக்கும் சவ்வாகும் அதற்கு ஆங்கிலத்தில் LES (lower esophageal sphincter) என்று அழைப்பார்கள்.  இந்த சவ்வானது உணவு பொருள்களை உணவு குழாயில் இருந்து வயிற்றிற்கு அனுப்புமே தவிர வயிற்றில் இருந்து உணவானது திரும்ப உணவு குழாயிக்கு வர அனுமதிக்காது.  அனால் நெஞ்செரிச்சல் உள்ளவர்களுக்கு உணவாது வயிற்றில் இருந்து திரும்ப மேலெழும்பி வரும்.  நம் வயிரானது மிக வீரியம் உள்ள அமிலத்தை தாங்குவதற்கு இயற்க்கையாகவே ஒரு கோழை படலம் வயிற்றின் உட்புறத்தை பாதுகாக்கிறது.  ஆனால் அத்தகைய படலமானது நமது உணவுகுழலுக்கு கிடையாது.  ஆகையால் நாம் உண்ட உணவானது வயிற்றில் இருந்து மேல் நோக்கி வரும்போது மிக அதிக அமில தன்மையில் இருப்பதால் மிக அதிக எரிச்சலை உணவு குழாயில் உண்டாக்கும்.  இதையே நாம் நெஞ்செரிச்சல் என்கிறோம்.  இதை கவனிக்காமல் விட்டால் மிக தீவிரமான விளைவுகளை உண்டாக்கும்.  

“அது எப்படி ஒரு சாதாரண நெஞ்சிரிச்சல் தீவிர பிரச்னையை உண்டாகும்..?”

நெஞ்சிரிச்சல்  என்றால் என்னவென்று பார்த்தோம் அனால் அது ஏன் வந்தது? எப்படி வந்தது?  போன்ற கேள்விக்கு பதில் கண்டறிந்தோம் எனில் மேலே கேட்டகப்பட்ட கேள்விக்கு சுலபமாக பதில் அறியலாம்.  

எனக்கு நெஞ்சிரிச்சல் வந்தபோது நான் பல உணவுகளை சோதித்து பார்த்திருக்கிறேன்.  உதாரணத்திற்கு, மிளகு ரசம், ஆப்பிள், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, பிரியாணி, வாழை பழம், கருப்பு உப்பு, வாழை தண்டு, வெறும் பழங்கள், மணத்தக்காளி, மோர், வினிகர், முட்டைகோஸ் ஜூஸ் இன்னும் பல.  என் நண்பர்களிடம் வாரத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு உணவை குறிப்பட்டு அது நெஞ்ஜெரிச்சலுக்கு நன்றாக வேலை செய்கிறது என்று சொல்லி பெரும் தலை வேதனையை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறேன் :-) .  

“முயற்சி செய்த எந்த உணவுமே பிரச்சனையை சரி செய்யவில்லையா?”

ஒவ்வொரு உணவும் ஒரு சில நாட்கள் நிவாரணம் அளித்தது.  குறிப்பாக மோர் பல மாதங்களுக்கு நிவாரணம் அளித்தது.  தினமும் மோர் குடிக்க ஆரம்பித்தேன்.  அனால் ஒரு கட்டத்தில் மோர் குடித்தாலும் நெஞ்செரிச்சல் தொடங்கிவிடும் ஆகையால் அதையும் கைவிட்டேன்.  குறிப்பிட்டு சொல்லகூடிய இன்னொரு உணவு ஆப்பிள்.  எனக்கு நெஞ்செரிச்சல் வரும்போதெல்லாம் ஆப்பிள் சாப்பிட்டால் உடனே கட்டுப்படும் அனால் பிரச்னை தீராது.

இவ்வாறு பல சோதனைகளை என் உடம்பில் செய்து பார்த்தேன் ஆனால் எதுவும் சரியாகவில்லை.  சித்த மருத்துவமனைக்கும் சென்று பார்த்தேன் அதுவும் சரியாகவில்லை.  ஒரு கட்டத்தில் வெறுத்துபோனேன்.  அறிவியல் தொழில் நுட்பம் இவ்வளவு வளர்த்திருக்கும் இக்காலத்தில் ஒரு வயிறு பிரச்சனையை சரி செய்ய முடியாத? போன்ற பல கேள்விகள் மனதிற்கு வந்தது.  

“அப்பறம் எப்படிப்பா சரி ஆச்சி..?”

ஒரு கட்டத்தில் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்து என் உடலில் தோன்றும் அறிகுறிகளை மிக கவனமாக ஆராய ஆரம்பித்தேன்.  இந்த நிலையில் தான் என் உடலின் மொழியை நான் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். மிக உனனதமான நண்பன் நம் உடல்.  தினமும் நம்மிடையே பேசிக்கொண்டிருக்கிறது நாம்தாம் கவனிப்பதில்லை.  

“சரி என்ன அறிகுறிலாம் தெரிஞ்சது..?”

பல அறிகுறிகளை கண்டறிந்தேன்.

1. உணவு சாப்பிட்ட உடன் சோம்பல்.
2. தினமும் காலையில் தும்மல்.
3. மாலை நேரத்தில் கண்கள் சிவத்தல்.
4. தீவிர நெஞ்செரிச்சல்.
5. எப்போதும் சோர்வு.
6. மலம் மோசமாக வெளியேறியது.  சரியாக செரிக்கவில்லை என்றால் எப்படி கூழ் மாதிரி போகுமோ அப்படி.

இன்னும் பல அறிகுறிகள்.  எனது நண்பர்கள் கணேஷ் மற்றும் மைதிலி அவர்களிடமும் என் மனைவி கௌரி இடமும் அனைத்து அறிகுறிகளையும் சொல்லி அவர்களை அரை வைதியர்காளாக்கிவிட்டேன் :-)

“சீரியஸ்சா போய்கிட்டு இருக்கும் போது காமடி பண்ணாத, அப்புறம் என்ன ஆச்சி..?”

எனக்கு நன்றாக நினைவில் உள்ளது, மோர் புளித்து இருப்பதால் அதை குடித்தால் நெஞ்செரிச்சல் அதிகம் ஆகும் என்று நினைத்து பல நாட்கள் அதை குடிக்காமல் இருந்தேன்.  வாழை (An NGO for education) பயிற்சி பட்டறை செல்லும் போது அங்கு தவறாமல் மோர் குடிப்பேன் காரணம் சுவையாக இருக்கும் :-) (ஒரு கூட்டமே அந்த மோருக்கு அடிமை).  இந்த சம்பவம்தான் என் தீர்விற்கு முதல் படி.  இந்த தடயம் தான் என் யோசனையை வேறு தளத்திற்கு கொண்டுசென்றது.  அதன்மூலம் தீர்வையும் அடைந்தேன்.  அடுத்த இறுதி அத்தியாயத்தில் பிரச்சனையின் மூலத்தையும் அதன் தீர்வையும் விரிவாக பார்ப்போம்.
  • ஆய்வு தொடரும்

0 comments:

Post a Comment