நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Tuesday 26 July 2016

 பெயரும் மொழியும்!



இந்தக்காலத்தில் தமிழில் பெயர் வைப்பதே ஒரு சவால்தான். ரொம்ப நாட்டுப்புறம் என்று புறந்தள்ளி விடுவார்கள். பெரும்பாலும் கணவன் பெயரையும், மனைவி பெயரையும் மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் ஒரு ‘ஸ்’ விகுதியோ ‘க’ விகுதியோ அல்லது இரண்டுமோ சேர்த்தால் பெயர் ரெடி! எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் தன் குழந்தைக்கு ‘வரஷிகா’ என்று பெயர் வைத்திருந்தார். என்ன அர்த்தம் என்று கேட்டதற்கு தெரியவில்லை! நியூமராலஜியும் மேலே சொன்ன ஃபார்முலாவும் சங்கமித்த பெயர் என்று பெருமிதம் கொண்டார்.
இன்னொரு நண்பர் தன் பையனுக்கு ‘ஃபிராங்க்ளின்’ என்று வைத்திருந்தார். அவர் கிறிஸ்தவர் அல்ல! எனவே நான் ஆச்சர்யப்பட்டு கேட்டேன்.  ‘பெஞ்சமின் ஃப்ராங்க்ளினை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ?’
‘யார் அவர்’
‘பிறகெப்படி இந்தப் பெயரை வைத்தீர்கள்’
‘ஸ்டைலாக இருந்தது..அதனால் வைத்தேன்’
கடவுளே!
மற்றொருவர் தன் மகளின் பெயர் ‘அபி’என்றார். “இதுதான் பெயரா..  இல்லை பெயர்ச் சுருக்கமா”
“பெயரே சுருக்கம்தான்”
“அதுவும் சரிதான். உலகமே வேகமாக ஓடிக்கொண்டிருக்கையில், பெயரை மட்டும் ‘தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்’ என்று நீட்டி முழக்கியா வைத்துக் கொண்டிருக்க முடியும்”
அந்தப் பெயரைக் கேட்டு மிரண்டவர் சுதாரித்து “அதைக்கூட ஸ்டைலாக சுருக்கி ‘செழி’ என்று வைத்துக்கொள்ளலாம்” என்று யோசனை சொன்னார். “ரொம்ப சிறப்பு ஐயா.. இனிமேல் யாராவது சுருக்கமாக பெயர் வைக்க விரும்பினால் தங்களிடம் அனுப்பி வைக்கிறேன்” என்று விடை பெற்றேன்.

சமீப காலங்களில் நிறைய பேர் தன் குழந்தைக்கு பெயர் தேடும்போது சுத்தமான தமிழ்ப்பெயர் வேண்டாம் சார் என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம். ஆனால் நாடுவதோ, பெயரைச் சொன்னதும் தமிழன் என்ற அடையாளம் தெரிந்து விடாதபடிக்கு ஒரு பொதுப்பெயர்! வியாபாரிகள்தான் தங்கள் பொருட்களின் விற்பனை எல்லைகளை கடந்து விரிய வேண்டும் என்பதற்காக தங்கள் பொருட்களுக்கு பொதுவான பெயர் வைப்பார்கள். இப்போது இந்த குளோபலைஷேஷன் உலகத்தில் குழந்தைகளும் பண்டங்களாகி விட்டார்கள்!

இதற்கு நேர்மாறாக ஒருசிலரோ தன் அதீத தமிழ்ப்பற்றை அல்லது இனப்பற்றை தன் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரில்தான் காட்டுவார்கள். என் உறவினர் ஒருவர் தன் மகனுக்கு ‘தமிழ்ப் புலி’ என்று பெயர் வைத்திருந்தார். அவனை முதன்முதலாக பார்ப்பவர்கள் கொஞ்சம் மிரட்சியோடுதான் பார்ப்பார்கள், இத்தனைக்கும் அந்தப்பிள்ளை ரொம்ப சாது!

எங்கள் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்வைச் சொல்கிறேன்!
நேற்று எங்கள் அலுவலக ஆண்டுவிழா. தங்கள் குழந்தைகளுடன் விழாவிற்கு வந்திருந்த ஊழியர்களுக்காகவே ஒரு போட்டி நடத்தப்பட்டது. சில பிரபலங்களின் பெயர்கள் சீட்டில் எழுதப்பட்டு இருக்கும். குழந்தை அதில் ஒரு சீட்டை எடுத்து, தன் பெற்றோரை பார்க்காமல் அதில் குறிப்பிட்டுள்ள பிரபலத்தை அங்கு தொங்கவிடப்பட்டுள்ள கரும்பலகையில் வரைய வரைய, அதைவைத்து அந்தப் பிரபலத்தின் பெயரை பெற்றோர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
என் சக நண்பர் தன் எட்டு வயது மகளை அழைத்து வந்திருந்தார்.  அவர்களும் அப்போட்டியில் பங்கு பெற்றனர். சீட்டை எடுத்ததும் திருதிருவென விழித்த அக்குழந்தை போட்டியை நடத்துபவர்களிடம் ஏதோ சொன்னது. உடனே அவர்கள் சீட்டை வாங்கி ஏதோ எழுதினர். என்னவென்று கேட்டதற்கு, அந்தக் குழந்தைக்கு தமிழில் எழுதியிருப்பது புரியாததால் அதையே ஆங்கிலத்திலும் எழுதினோம் என்றனர்.
ஆங்கிலத்தில் எழுதியும் பலனில்லை. சாக்ஃபீஸை கொடுத்து விட்டு தன் அப்பாவிடம் சென்று விட்டது. காரணம் சீட்டில் வந்திருந்த பெயரையே அப்பொழுதுதான் முதன்முதலாக கேள்விப்படுகிறாள் அவள். அப்புறம் எங்கிருந்து வரைவது?!. அப்படியென்ன பெயர் அதில் இருக்கிறது என்று பார்த்தால்....அதிர்ச்சி! அதில் இருந்த பெயர் ‘பாரதியார்’. முதலில் அந்தப்பெண்ணுக்கு தமிழ் எழுத்துகளை படிக்கத் தெரியவில்லை என்று அதிர்ந்தேன். பின்னர் தமிழின் மாபெரும் கவிஞரை தெரியவில்லையே என்று அதிர்ந்தேன். இத்தனைக்கும் என் நண்பர் ஒரு தமிழர். அந்தக் குழந்தையின் பெயரோ ‘யாழினி’!

நான் அதிர்ச்சியுடன் புன்னகைத்தவாறே அவரிடம் கேட்டேன் “என்ன தல! பாரதியாரே தெரியலயா..”
“என்ன ஜி பண்றது! இந்தக் காலத்து பிள்ளைங்களுக்கு பவர்ஸ்டார கூட நல்லா தெரியும் , ஆனா பாரதி - யார்னு கேப்பாங்க” என்று பஞ்ச் டயலாக் விட்டார்.
“யாழினி-னு என்ன அழகா தமிழ்ப்பெயர் வச்சிருக்கீங்க..”
“அது ஒன்னுதான் ஜி நான் செஞ்ச சாதனை! அந்தப் பேரை வைக்கிறதுக்கே எவ்ளோ போராட வேண்டியிருந்துச்சு தெரியுமா! ஒஃய்ப், அப்பா அம்மா, மாமியார்னு ஒவ்வொருத்தர்கிட்டயும் பர்மிஷன் வாங்கறதுக்குள்ள போதும்போதும்னு ஆயிருச்சு! அவங்களப் பொறுத்தவரைக்கும் யாழினிங்கறது கேக்க கொஞ்சம் ஸ்டைலா தெரிஞ்சதால ஒத்துக்கிட்டாங்க. ஆனா என்ன பிரயோசனம்! படிக்கிறது ஆங்கிலோ இண்டியன் ஸ்கூல், தமிழை ஃபர்ஸ்ட் லாங்க்வேஜா கூட எடுத்துக்கல! அப்புறம் எப்படி தமிழ் தெரியும்.! நான்தான் கொஞ்ச கொஞ்சமா சொல்லிக் கொடுக்கணும்” என்று நொந்து கொண்டார்.

யாழினி என்னைப்பார்த்து புன்னகைத்தாள். நான் அவளிடம் “ஹலோ யாழினி! எந்தப் பள்ளியில படிக்கிறீங்க.. என்ன வகுப்பு?” என்றேன். அவள் குழப்பமாக தன் தந்தையின் முகத்தைப் பார்த்தாள். நண்பர் அசடு வழிந்தவாறே.. “ஹி..ஹி... அவங்க அம்மா தெலுங்கு. ஸோ இவளுக்குத் தமிழ் கொஞ்சம்தான் தெரியும். நீங்க இவ்ளோ சுத்தமா(?!) தமிழ்ல கேட்டீங்கன்னா அவளுக்கு புரியாது” என்று சொன்னார்.
நான் குழம்பியவண்ணம் அவரைப் பார்க்க “எங்களுது லவ் மேரேஜ்!” என்று மேலும் அசடு வழிந்தார்.  “ஓ!  ‘தாய்’ மொழி தெலுங்குன்னு சொல்லுங்க. அப்படினா தெலுங்கில கேக்கறேன்.. என எனக்குத் தெரிந்த தெலுங்கில் கேட்டேன் “நூவு ஏ ஸ்கூல்லோ சதுதுன்னாரு? ஏ கிளாஸ்ஸு?”. சட்டென்று புரிந்துகொண்டு புன்னகையுடன் பதில் சொன்னாள் யாழினி “அங்கிள்! ஐ ஆம் ஸ்டடியிங் ஃபோர்த் ஸ்டாண்டர்ட் இன் செயின்ட் பாட்ரிக்ஸ் ஆங்கிலோ இண்டியன் ஹையர் செகன்ட்ரி ஸ்கூல்!

0 comments:

Post a Comment